7 November 2012

நடைபிணங்கள்



பசிக்கான உணவு; தேடலுக்கான கல்வி
உரிமைக்கு உலை வைக்காத அரசியல்
விலை பேசி விடாத வளர்ச்சி
சாதியில்லா சமூகம்; இருட்டிலிருந்து வெளிச்சம்;
விளைச்சலுக்கு தண்ணீர் – என
அத்தனைக்கும் போராடுகிற தேசத்திலிருந்து
தேசத்திற்காய் போராடிய உங்களுக்கு
உதவாமல் போனது எங்களின் இயலாமை தான்
ஆனாலும் செத்துப்போனது முத்துக்குமார் மட்டுமல்ல
நாங்களும் தான்.. இப்போது நடைபிணங்கள் அவ்வளவே...

4 November 2012

எழுது பொருள்

பேனாவுக்கும் உனக்குமான வேறுபாட்டை
இப்படி சொல்லிவிட முடியும்.....
பேனாஎன் எழுது பொருள்
நீநான் எழுதும் பொருள்!!!

கிழிந்த பக்கங்கள்



நீ கிழித்துவிட்டுப் போனதாய் சொல்லப்படுகிற
என் வாழ்வின் சில பக்கங்களை உன் நினைவுகளால்
இட்டு நிரப்புவதே என் சமீபகால எழுத்தின் நோக்கமாய் இருக்க,
இதையும் கூட கிழிந்த பக்கங்களென சொல்லிவிடக்கூடும் சிலர்எனில்
எது செய்தும் ஏற்றுக்கொள்ள முடியாத
மூன்றாம் தர புத்தகமாய் இருப்பதை விட,
சில சமரசங்களோடு ஒட்டிவிட முடிகிற
கிழிந்த புத்தகமாய் இருந்து விட்டுப் போகட்டும் என் வாழ்வு!!!!